சுடச்சுட

  

  பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்: போதிய களிமண் கிடைக்காததால் அவதி

  By DIN  |   Published on : 11th January 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  போதிய களிமண் கிடைக்காததால் பொங்கல் பானை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நிகழ் ஆண்டு பொங்கல் பானையில் தேவை அதிகரித்துள்ளதாகவும் பானை தயார் செய்யும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
  பரமத்திவேலூர், கு. அய்யம்பாளையம், பாகம்பாளையம், பொன் நகர், கபிலர் மலை, தீர்த்தாம்பாளையம், ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் பானை செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  இவர்கள் கார்த்திகை விளக்கும், அகல் விளக்குகளையும் செய்து வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டும் சூரிய பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வைப்பதற்கு மண்பானைகளை பயன்படுத்துகின்றனர்.
  தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண் பானை தொழிலாளர்கள் பொங்கல் பானைகளைத் தயாரித்து வெளியூருக்கு அனுப்பி
  வருகின்றனர்.
  கடந்த ஆண்டு மூன்றுபடி முதல் நான்கு படிவரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.150 வரை விற்பனையானது. ஒரு படி முதல் இரண்டு படிவரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.100 வரை விற்பனையானது. தற்போது மூன்று படி முதல் நான்கு படி பொங்கல் வைக்கும் பானைகள் ரூ. 200 -க்கும், ஒரு படி முதல் இரண்டு படிவரை பொங்கல் வைக்கும் பானைகள் ரூ.150 க்கும் விற்பனையாகிறது. இதுகுறித்து மண்பானை தொழிலில் ஈடுபட்டு வரும் அருணாசலம் கூறியதாவது:
  நாமக்கல் மாவட்டத்தில் மண் பானை செய்வதற்கு உரிய களிமண் கிடைக்காததால் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே முருங்கை கிராம பகுதியில் உள்ள ஒரு ஏரியிலிருந்து களி மண்ணை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
  மேலும் களிமண்ணை எடுப்பதற்கு முருங்கை கிராம பொதுமக்கள் சில வருடங்களாக அனுமதி அளிக்காததால் களிமண்ணை கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
  இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மண்பாண்ட தொழில் ஈடுபடாதவர்களுக்கு  மின்சார திருவை சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு இதுவரை மின்சார திருவை சக்கரங்களை வழங்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் களிமண் கிடைப்பதற்கும், மின்சார திருவை சக்கரம் வழங்குவதற்கும், இலவச மின்சாரம் வழங்குவதற்கும், மழைக் காலங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வரை அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai