சுடச்சுட

  

  ரூ. 1.75 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கி வைத்தார்

  By DIN  |   Published on : 13th January 2019 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்செங்கோடு ஒன்றியம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிடும் நிகழ்ச்சி, முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
  திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா பூமிபூஜையிட்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
  முதலாவதாக மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநத்தம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கட்டடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவினாசிப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடத்தையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ராமாபுரம் கொசவம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தையும், செண்பகமாதேவி ஊராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சின்னார்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா திறந்து வைத்தார்.
  அதைத் தொடர்ந்து வெங்கடேசபுரி, நெசவாளர் காலனி, சின்ன கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் தொடக்கி வைத்தார்.
  தொடர்ந்து மல்லசமுத்திரம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்களையும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா வழங்கினார்.
  நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பொ. பாலமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பத்மாவதி, அட்மா தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, புஷ்பராஜன், மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai