குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த பெற்றோர் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும்

குழந்தைகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல்

குழந்தைகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில். 
நாமக்கல் அருகே பொம்மைகுட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனத்தின் 20 -ஆவது ஆண்டுவிழா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளியண்ணன் வரவேற்றார். முதல்வர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார். 
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் பங்கேற்று, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 
அப்போது அவர் பேசியது: பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட விடவேண்டும். பொதுத்தேர்வு என்று குழந்தைகளை கசக்கி பிழியக்கூடாது. அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். திறமையை வளர்த்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் குறிக்கோளை அடையவேண்டும். 
அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் அதிக திறனே உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பெற்றோர்கள் அவர்களை பக்குவப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும். உடல்வலிமை இருந்தால் மனவலிமை தானாக வரும். 
உடல்வலிமையை வளர்த்துக்கொள்ள விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் முன்னுக்கு வந்ததாக தெரியவில்லை. மாணவர்கள் ஆசிரியர்களை தங்கள் தாய் போன்று மதிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல ஒழுக்கம், நல்ல கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். 
விழாவில் கல்வி நிறுவன இயக்குநர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர் கோலப்பன், கிங்மேக்கர் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் மோகனப் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமையாசிரியர் பழனிசாமி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com