குமாரபாளையத்தில் பிப்.23-இல் ஜல்லிக்கட்டு
By DIN | Published On : 29th January 2019 04:48 AM | Last Updated : 29th January 2019 04:48 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தில் மாசிப் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் சிறப்பு வழிபாடுகளுடன் கால்கோள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நம்ம குமாரபாளையம் அமைப்பு மற்றும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 450 காளைகள், 500 காளைபிடி வீரர்களும் பங்கேற்றனர். தற்போது 2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு விழாவுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளுடன் பாலக்கால் நடப்பட்டது. மாசி பண்டிகை முன்னிட்டு வரும் பிப்.23-ம் தேதி மிகவும் பாதுகாப்பாகவும், பிரமாண்டமாகவும் ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை உறுப்பினர் சி.செல்வகுமார சின்னையன், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே.நாகராஜன், அதிமுக முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பி.இ.புருஷோத்தமன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.