இரு சக்கர வாகனங்களிலும் அரசுப் பதவி பெயர்கள்!
By DIN | Published On : 01st July 2019 09:59 AM | Last Updated : 01st July 2019 09:59 AM | அ+அ அ- |

அரசுத் துறைகளில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் போல், இரு சக்கர வாகனங்களிலும் தங்களது பதவியைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 160 அரசுத் துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், உயர் பொறுப்பில் சுமார் 2 லட்சம் பேர் வரையுள்ளனர். மக்கள் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, அரசு சார்பில் அதிகாரிகளுக்கென தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தங்களது பெயர் மற்றும் பதவியின் பெயரைப் பலகை வடிவில் வைத்திருப்பர். காலப்போக்கில், ஒவ்வொரு துறையில் பணியாற்றும் ஊழியர்களும், தங்களது இரு சக்கர வாகனங்களில் துறைச் சார்ந்த பதவியை பொறித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் உறவினர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் துணை ஆட்சியர் என ஆங்கிலத்தில் எழுதி நாமக்கல் நகரில் வலம் வந்தார். இதைப் பார்த்த போலீஸார் அந்த வாகனத்தைப் பிடித்து விசாரித்தபோது, தனது சகோதரியின் கணவர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றி வருவதாகக் கூறினார். அதனையடுத்து அவரிடம் இதுபோன்று பதவி பெயர்களை வாகனங்களில் எழுதக்கூடாது. இவ்வாறு பதவியை இரு சக்கர வாகனங்களில் எழுதுவது தவறான செயலுக்கு வழிவகுக்கும் என என போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.