பட்டணம் சாலையில் சீரமைக்கப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு
By DIN | Published On : 01st July 2019 09:56 AM | Last Updated : 01st July 2019 09:56 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லத் தடை விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டி, மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விபத்தில் இறப்பவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாதவர்கள் என்பதே அனைவரும் அறிந்த உண்மை. உயிருக்கு உத்திரவாதமாக ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்வோர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பதை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், விபத்தில்லா சாலை பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில், கடந்த ஒரு வாரமாக, அந்தந்த காவல் நிலையத்துக்குள்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு பகுதியைத் தேர்வு செய்து போக்குவரத்து போலீஸார், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியுமாறு, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்தால், குறிப்பிட்ட சாலை வழியாக அவர்கள் செல்வதற்கு போலீஸார் தடை விதிக்கின்றனர்.
அதன்படி, நாமக்கல் - திருச்சி சாலை, நரசிம்மர் கோயில் சாலை, ராசிபுரத்தில் கோனேரிபட்டி - சேந்தமங்கலம் பிரிவு சாலை, பரமத்திவேலூரில், வேலூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை, லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க், திருச்செங்கோடு டவுன் அண்ணா சிலை - சங்ககிரி ரவுண்டானா, பள்ளிபாளையத்தில் காவிரிப் பாலம் - நான்கு சாலை, குமாரபாளையம் ராஜம் தியேட்டர் - ஆனங்கூர் பிரிவு ஆகிய ஆறு இடங்களில் "தலைக்கவசம் இல்லையேல் சாலையில் செல்ல அனுமதியில்லை' என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை எச்சரிக்கை செய்து போலீஸார் அனுப்பி வருகின்றனர்.