சுடச்சுட

  

  டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம், 7 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறப்பட்டது.
  நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் 4,800 டேங்கர் லாரிகள் எரிவாயு ஏற்றிக் கொண்டு, 6 மாநிலங்களிலும் உள்ள 53 பாட்டிலிங் பிளாண்டுகளில் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
  2018 -23-ஆம் ஆண்டுக்குரிய டேங்கர் டெண்டர் ஒப்பந்தத்தின்போது, மொத்தம் உள்ள 5,500 லாரிகளில் 4,800 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. 700 லாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வங்கிக் கடன் பெற்று புதிய  லாரிகளை வாங்கியோர்,  தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
  இதைத் தொடர்ந்து, ஜூன் 20-இல் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுவில், காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின், ஜூலை 1-ஆம் தேதி  முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
  இந்தச் சூழ்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பால்வசந்தகுமாரை நீதிமன்றம் நியமித்தது.
  இந்தத் தகவல் திங்கள்கிழமை நண்பகல் 1 மணிக்கு சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக,உடனடியாக அறிவிப்பு வெளியிட்டது.
  இந்த நிலையில்,   வேலைநிறுத்தம் தொடங்கிய 7 மணி நேரத்துக்குள்ளே திரும்பப் பெறப்பட்டது குறித்து சங்கத்ன் தலைவர் எம்.பொன்னம்பலம், செயலர் என்.ஆர்.கார்த்திக், பொருளாளர் கணபதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:-
  எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு தலைமையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோரிக்கைகளை கேட்டறிய ஜம்மு-காஷ்மீரில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பால்வசந்தகுமாரை மத்தியஸ்தரமாக நியமிப்பதாகவும், அவர் நேரடியாக கோரிக்கைகளை கேட்டறிந்து, 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் நீதிபதி தெரிவித்தார். 
  இதையடுத்து,  சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டு, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai