பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th July 2019 07:56 AM | Last Updated : 05th July 2019 07:56 AM | அ+அ அ- |

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பல்தொழில்நுட்பம், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பதற்கான படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதில், மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து கல்வி உதவித்தொகைக்குரிய இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்.25-ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை நவ.31-ஆம் தேதிக்கு முன்பும் தாங்கள் படிக்கும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.