கந்துவட்டி புகாரில் ஒருவர் கைது
By DIN | Published On : 08th July 2019 09:48 AM | Last Updated : 08th July 2019 09:48 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டில் கந்துவட்டி புகாரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செங்கோடு அருகேயுள்ள மோடமங்கலம் தண்ணீர்பந்தல்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (49). தறிப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு படவீடு பச்சாம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (45) என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.80 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளார். விவசாயியான சந்திரசேகரன் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராஜ் தான் வாங்கிய கடனுக்காக இதுவரை வட்டியாக ரூ.1.15 லட்சம் அளித்துள்ளார். மேலும், ரூ.1.25 லட்சம் தரவேண்டும் என்று சந்திரசேகரன் கூறினாராம். மேலும், அதற்காக தறிப்பட்டறையின் பத்திரத்தையும் வாங்கிக் கொண்டாராம். பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தாராம். இதனால் மன உளைச்சல் அடைந்த தங்கராஜ், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசுவிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர் சந்திரசேகரன் மீது கந்து வட்டி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி செளமியா மேத்யூ உத்தரவிட்டார். அதன்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.