சுடச்சுட

  

  திடக்கழிவு மேலாண்மை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

  By DIN  |   Published on : 11th July 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லில்  மக்கும் குப்பை, மக்காத  குப்பைகளை தரம் பிரிக்கும் வகையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
  நாமக்கல் நகராட்சியில்  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ்  300 டன் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  இதனைக் கொண்டு உரம் தயாரிப்பதற்காக,  நகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழிவுகளின் தேக்கம் அதிகமாவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அதை உரமாக தயாரித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, அடுக்குமாடிக் குடியிருப்புகள்,  உணவகங்கள், கல்லூரிகள், விடுதிகள்  உள்ளிட்டவை இதற்கான பணியை செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மக்கும் குப்பைகள் 100 கிலோ முதல் ஆயிரம் கிலோ  வரையில் சேகரித்தால்,  உரம் தயாரிப்புக்கான பணியை எவ்வாறு செய்வது என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திங்கள்கிழமை பயிற்சி வழங்கியது.
  அதனைத்  தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் கே.எம்.சுதா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக் குமார் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.  மக்கும் குப்பைகளை தவிர்த்து, மக்காத குப்பைகளைச் சேகரித்து வைத்து, நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் நேரடியாக வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வர் என தெரிவிக்கப்பட்டது. வரும் நாள்களில் கல்லூரிகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு,   இத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக  பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் தெரிவித்தார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai