குடியிருப்புகளில் கூண்டுகள்: பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குழந்தைகள்

அமைதியைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்;  நாங்கள்  இருக்கிறோம் என குறும்புத்தனம் செய்யும்

அமைதியைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்;  நாங்கள்  இருக்கிறோம் என குறும்புத்தனம் செய்யும் பறவைகளைப் பார்ப்பதிலும்,  அதனை ரசிப்பதிலும் பலர் தங்களை மறக்கின்றனர்.  தற்போதைய காலச்சூழலில் பெரும்பாலான குடியிருப்புகளில்  பறவைகளின் கூண்டுகள் இல்லாமல் இல்லை. பறவைகள் வளர்ப்பில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோழிகள் வளர்ப்பில் பெயர் பெற்ற மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது.  அவை மட்டுமின்றி, புறா, காடை, வான்கோழிகள் விற்பனைக்காக அதிகம் வளர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் வணிக ரீதியாக இருந்தாலும்,  தங்களின் நிம்மதிக்காக பலர் வீட்டின் உள்ளேயும்,  வெளியேயும்  கூண்டுகள் அமைத்து  கிளி,   குருவி,  லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவைகளையும் வளர்த்து வருகின்றனர். உள்ளூர் பறவைகளைக் காட்டிலும் வெளிநாட்டுப் பறவைகள் விற்பனை தற்போது அதிகரித்து விட்டது என்றே கூறலாம். இதற்கான விற்பனை மையங்களும், மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் லாரி, கோழிப் பண்ணை உரிமையாளர்களும்,  அரசுத்துறை அதிகாரிகளும்,  ஊழியர்களும் தங்கள் குடியிருப்புகளில் வீடு போன்று  வடிவமைக்கப்பட்ட  கூண்டுகளை அமைத்து பறவைகளை வளர்க்கின்றனர். இது தங்களுக்காக அல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவே என்கின்றனர். 
அதேபோல் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும், வந்தபின்பும் தங்களது செல்லப் பறவைகளுக்கு உணவுஅளித்து ரசிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வளர்ந்து வரும் நவீன உலகில்,  பலர்  செல்லிடப்பேசியின் கைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.  பெரும்பாலானோர் அதன் மூலம் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். குழந்தைகளும் செல்லிடப் பேசிக்குள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பறவைகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துகின்றனர்.
இது குறித்து பறவையின ஆர்வலர் தில்லை சிவகுமார் கூறியது: காலமாற்றத்தில் பெரும்பாலான பறவைகள் அழிந்து விட்டன. தற்போது  குறிப்பிட்ட சில பறவைகளை பார்ப்பதே அதிசயமாக உள்ளது. நாமக்கல் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் பறவைகளுக்காக மாடியில்  இறை வைப்பது, தண்ணீர் வைப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். என்னுடைய வீட்டிலேயே பறவைகளுக்காக தனி இடம் ஒதுக்கியுள்ளேன். இயற்கை என்பது மரங்கள்,  நதிகள் மட்டுமல்ல,  அழகிய பறவைகளும் தான். அவை என்றும் அழியக் கூடாது. அதைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.  நிம்மதியைத் தேடி வெளியே செல்ல வேண்டாம். குழந்தைகளைப் போல் பறவைகள் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டினால் எந்த துன்பமும் நம்மை நெருங்காது. குழந்தைகளுக்கும் பறவைகளைக் காண்பித்து மகிழ்ச்சியடைய செய்வது பெற்றோரின் கடமை என்பது எனது கருத்தாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com