குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்னா: 20 விவசாயிகள் கைது
By DIN | Published On : 13th July 2019 09:58 AM | Last Updated : 13th July 2019 09:58 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தை அடுத்த எளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளப்பட்டு, விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
எளையாம்பாளையம் ஏரியில் இயந்திரங்களைக் கொண்டு மண் அள்ளப்படுவதோடு, செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இவ் விவகாரம் தொடர்பாக குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் வருவாய்த் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மண் விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனால், ஏமாற்றமடைந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் படைவீடு பெருமாள் தலைமையில் 20 பேர் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து வெள்ளிக்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எளையாம்பாளையம் ஏரியில் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளுவதை தடுக்க வேண்டும். உரிய அனுமதியுடன் முறையாக விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை வழங்க வேண்டும். மண் திருட்டைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகளிடம், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் பேச்சு நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகப் பணிகளுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக பெருமாள் உள்பட 20 பேரைக் கைது செய்தனர். விவசாயிகளின் தர்னா போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.