சுடச்சுட

  

  நாமக்கல் குன்னமலை கிராம மண்ணில் இயக்கப்பட்ட சந்திரயான் - 2 லேண்டர், ரோவர்: நிலவில் இறங்குவதற்கு முன்பாக மண் மாதிரிகளை அளித்த பெரியார் பல்கலைக்கழகம்

  By ஆர்.ஆதித்தன்  |   Published on : 14th July 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சந்திரயான் - 2 விண்கலத்தில் பயணிக்கும் லேண்டர்,  ரோவர் ஆகிய உபகரணங்கள் நிலவில் இறங்குவதற்கு முன்பாக  நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில்  தோண்டி எடுக்கப்பட்ட அனார்தசைட்  மண் மாதிரியில் இயக்கி,  இஸ்ரோ சோதித்துப் பார்த்து வெற்றி கண்டது.
  விண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போட்டி போடும் இஸ்ரோ சார்பில் கடந்த 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான் -1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  இந்த சந்திரயான் - 1 விண்கலம் நிலவின் வட  துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு,  நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
  அதன் தொடர்ச்சியாக, நிலவை மேலும் ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் - 2 திட்டத்தை ரூ.603 கோடி மதிப்பில் இஸ்ரோ முன்னெடுத்தது.  அதன்படி,  நிலவின் மேற்பரப்பையும்,  தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
   சந்திரயான் - 2 விண்கலம் கடந்த 2018 ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால்,  பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.  தற்போது ஜிஎஸ்எல்வி  எம்கே 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம்,  ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட  உள்ளது.
  சந்திரயான்  - 2 விண்கலத்தில் ஆர்பிட்டர்,  லேண்டர் (விக்ரம்), ரோவர்  (பிரக்யான்) ஆகிய மூன்று பகுதிகளையும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது.  இதில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் ஆர்பிட்டர் (விண்கலம்) இறங்குகிறது.   தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரியும்.  அதில் இருந்து  6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் நிலவின் தரையில் பயணித்து ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  அதேவேளையில்,  நிலவில் பயணிக்க இருக்கும் சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம்,  சித்தம்பூண்டி குன்னமலை கிராமத்தில் கிடைத்த  அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
  இதுதொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புவித் தகவல் மையத்தின் இயக்குநர் சி.அன்பழகன் கூறியது: சந்திரயான் -1 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டமாக சந்திரயான் - 2 திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது.  குறிப்பாக,  நிலவின் பரப்பில் ஆய்வு செய்ய உள்ள லேண்டர், ரோவரை பத்திரமாக இறக்கி இயக்குவது இஸ்ரோவுக்குச் சவாலாக இருந்தது.
  அச் சமயத்தில் சந்திரயான் - 1 திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை,  நிலவின் பரப்பில் உள்ள மண் மாதிரியான அனார்தசைட்  இருப்பதை அறிந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் உதவியை நாடினார்.  2012 - 13- இல் நிலவின் பரப்பில் உள்ள மண் மாதிரியான அனார்தசைட் நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி குன்னமலை கிராமத்தில் இருப்பதை எடுத்துரைத்தோம். 
  மேலும்,  இஸ்ரோவிடம் முறையாக அனுமதி பெற்று அனார்தசைட்டை தோண்டி எடுத்து, மண் துகள்களாக இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தோம்.  சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு,  சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும்,  லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப் பார்த்தனர்.  பொதுவாக,  நிலவின் பரப்பில் மண் துகள் அதிகமாக இருக்கும்.  அந்தவகையில்,  அனார்தசைட் மண் மாதிரிகளைக் கொண்டு லேண்டர், ரோவர் இயக்கி வைத்து சோதிக்கப்பட்டது.
  அதேவேளையில், வெளிநாடுகளில் அனார்தசைட் மண் மாதிரியில் லேண்டர்,  ரோவரை இயக்க கோடிக்கணக்கில் பணம் செலவாகும்.  ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை சார்பில்  ரூ.10 லட்சம் செலவில் தரமான அனார்தசைட் மண் மாதிரிகளை உருவாக்கி, இஸ்ரோவுக்கு அளித்தது பெருமையாக உள்ளது.  இந்த அனார்தசைட் மண் மாதிரிகள் அடுத்தடுத்து நிலவு குறித்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் லேண்டர், ரோவரைப் பத்திரமாக இறக்கி இயக்க உதவியாக இருக்கும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai