ஆடிப்பெருக்கு நெருங்கும் வேளையில் குட்டை போல் மாறிய காவிரி ஆறு!

போதிய மழையில்லாதது, கர்நாடகம் நீர் திறக்காதது போன்றவற்றால், அகன்ற காவிரி, வறண்ட காவிரியாக மாறியுள்ளது. ஆடிப்பெருக்கு நெருங்கும்


போதிய மழையில்லாதது, கர்நாடகம் நீர் திறக்காதது போன்றவற்றால், அகன்ற காவிரி, வறண்ட காவிரியாக மாறியுள்ளது. ஆடிப்பெருக்கு நெருங்கும் சூழலில், மோகனூர் பகுதி மக்கள் குட்டை போல் தேங்கியிருக்கும் காவிரி ஆற்றின் நீரில் குளித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் 12 டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது காவிரி ஆறு. இந்தியாவில் கங்கைக்கு அடுத்தபடியாக போற்றப்படும் ஆறுகளில் ஒன்று காவிரி. ஒரு கரையில் இருந்து மறுகரையானது 3 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் வகையில் ஆறானது அகன்று காணப்படும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், ஆண்டின் 365 நாள்களும் வற்றாத ஜீவநதியாக காட்சியளித்த காவிரி, கடந்த சில ஆண்டுகளாக வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. காலத்திற்கு ஏற்றவாறு பருவமழை பெய்யாதது, கர்நாடகத்தில் மழை பெய்தாலும், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறந்து விடாதது போன்றவை இதற்கான காரணம் என்று கூறலாம்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும். 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படும்போது ஓரளவு ஆற்றில் தண்ணீர் வழிந்தோடும். இதனால், விவசாயத் தேவைக்கு மட்டுமின்றி, குடிநீர் தேவைக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  கடந்த ஆண்டு தமிழகம், கர்நாடகத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகளில் நீர் தேக்கி வைக்க முடியாமல் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் 2.10 லட்சம் கன அடி வீதம் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. அடுத்த ஓரிரு மாதங்களிலேயே கிடுகிடுவென சரிந்து விட்டது. தற்போது மேட்டூர் முதல் பூம்புகார் வரை அகன்ற காவிரியானது; வறண்ட காவிரியாகக் காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது தினமும் ஆயிரம் கனஅடி வீதம் குடிநீர்த் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி, நீர்வரத்து 248 கனஅடி இருக்கும் நிலையில், வெளியேற்றம் ஆயிரம் கனஅடியாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் நீர்மட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் 10 அடியை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கிடையே, ஆக.3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்படும். புதுமணத் தம்பதியர் காவிரி ஆற்றில் புனித நீராடி மகிழ்வர். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் சென்று காவிரி தாயை வழிபடுவர்.
ஆடி 18- பிறப்புக்கு இன்னும் 18 நாள்களே உள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததைக் கண்டு மக்கள் வேதனைப்படுகின்றனர். மோகனூர் காவிரி ஆறு பகுதி முழுவதும் நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் தேங்கியிருக்கும் நீரில் மக்கள் குளித்துச் செல்வதைக் காண முடிகிறது. ஒரு புறம் குவாரிகளுக்காக மணல் எடுக்கும் வேலைகளும் மும்முரமாக நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரையோரப் பகுதி மக்கள் உள்ளனர்.
இதுகுறித்து மோகனூர் பகுதி மக்கள் கூறியது: இப்பகுதியில் உள்ளோருக்கு மற்ற விழாக்களைக் காட்டிலும், ஆடிப்பெருக்கு விழா தான் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும். காவிரி ஆற்றில் குளித்து, அருகில் உள்ள அசலதீபேஸ்வரர் கோயிலில் வழிபட்டு வருவோம். வெளியூரில் உள்ள உறவினர்களும் இந்நாளில் வீட்டுக்கு வருவர். கடந்த சில ஆண்டுகளாகவே காவிரி ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் ஆடிப்பெருக்கு விழாவைஓஈ கொண்டாட முடியாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இவ்விழா பெரிதாக தெரியவில்லை. தற்போது ஆறு வறண்டு கிடப்பதும், குட்டை போல் தேங்கியிருக்கும் நீரில் குளித்து வருவதும் வேதனையாக உள்ளது. கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இல்லையேல், ஆடிப்பெருக்கையொட்டி தமிழக அரசு அதிகளவில் நீரைத் திறக்க வேண்டும். அப்போது தான் 12 மாவட்ட மக்களும் இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ச்சியடைவர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com