தங்க அரிப்பு மண் எடுத்துவரும் லாரிகளிலும் சோதனை: ஆட்சியரிடம் பெண்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் தங்கம் அரிப்பதற்கான மண் எடுத்துவரும் லாரிகளும் சோதனை நடைபெறுவதாகவும், இதனால் வேலையின்றி தவித்து வருவதாகவும் ஆட்சியரிடம் பெண்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தங்கம் அரிப்பதற்கான மண் எடுத்துவரும் லாரிகளும் சோதனை நடைபெறுவதாகவும், இதனால் வேலையின்றி தவித்து வருவதாகவும் ஆட்சியரிடம் பெண்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், காதப்பள்ளி, வசந்தபுரம், பாத்தையான்குட்டை, தத்தாத்திரிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்க மண் அரிப்பு வேலையை செய்து வருகின்றனர். இந்த மண்ணை தண்ணீர் விட்டு அலசும்போது அதில் கிடைக்கும் சிறு தங்க துகள்களை விற்பனை செய்து இந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
 கேரளம், ஆந்திரத்தில் இருந்து ஒரு டன் அரிப்பு மண்ணை ரூ.30 ஆயிரம் கொடுத்து தொழிலாளர்கள் வாங்கி வருகின்றனர். பின்னர் பயன்பாட்டுக்கு பின்னர், அவற்றை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவர்கள் பல்வேறு தேவைகளுக்கு அதை பயன்படுத்துகின்றனர்.
 கடந்த பல ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வரும் நிலையில், கனிம வளத் துறையினர் அரிப்பு மண் எடுத்து வரும் லாரிகளைப் பிடித்துச் சென்று தங்களது வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தொழிலாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
 சில தினங்களுக்கு முன் அரிப்புக்காக கொண்டு வரப்பட்ட 5 மண் லாரிகளை, நாமக்கல் நல்லிப்பாளையம், ராசிபுரம் பகுதிகளில் பிடித்து அதனை காவல் நிலையத்தில் கனிமவளத் துறையினர் ஒப்படைத்துள்ளதாகவும்,
 இதனால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி தவிப்பதாகவும் அரிப்பு மண் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
 காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 10 பேரை மட்டும் ஆட்சியர் மு.ஆசியா மரியத்தை சந்திக்க அனுப்பி வைத்தனர். மீதமுள்ள அனைவரும் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நிலத்தில் காத்திருக்கச் செய்தனர்.
 இதுதொடர்பாக, தங்க அரிப்பு மண் தொழிலாளர்கள் கூறியது: ஆந்திரம், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து டன்னுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து மண்ணை வாங்கி வருகிறோம். அதில் தண்ணீர் விட்டு அலசி கிடைக்கும் துகள்களை எடுத்து விற்பனை செய்தால் ஓரளவு லாபம் கிடைக்கும். சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இந்தத் தொழில் அதிகம் நடைபெறுகிறது. ஆனால், கனிம வளத் துறையினர் லாரிகளை மடக்கி தொழிலை பாதிக்கும் வகையில் நெருக்கடி கொடுக்கின்றனர். கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு எங்களை தள்ளியுள்ளனர். 5 லாரிகளை பிடித்து அதை விடுவிக்க மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.
 இதுகுறித்து கனிம வள உதவி இயக்குநர் ஆர்.ஜெயந்தி கூறியது: சட்ட விதிகளுக்கு உள்பட்டே லாரிகளை பிடித்து வைத்துள்ளேன். நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் 3 லாரிகளும், ராசிபுரத்தில் 2 லாரிகளும் உள்ளன. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்வதாலே மண்ணை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com