மாணவர்கள் யாரும் இல்லாத அரசுப் பள்ளி!

நாமக்கல் அருகே மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன
மாணவர்கள் யாரும் இல்லாத அரசுப் பள்ளி!

நாமக்கல் அருகே மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளியின் தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்கிறார்.
 நாமக்கல் அருகே பொன்னேரிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில், ஐந்து ஆண்டுகளாக போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பெரும்பாலோனோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 2018-2019-இல் இரு மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அவர்களும், ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பிரேமகுமாரி உள்ளார்.
 நிகழாண்டில் இதுவரை மாணவ, மாணவியர் யாரும் இப்பள்ளியில் சேரவில்லை. கடந்த ஆண்டு வரை இங்கு ஆசிரியையாக பணியாற்றியவரும், காளிப்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டு விட்டார். பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால், வகுப்பறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. காலை 9 மணிக்கு வரும் தலைமை ஆசிரியை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, மாலை 4 மணி வரை புத்தகங்களை படித்து பொழுதைக் கழிக்கிறார்.
 நாமக்கல் அழகுநகர் பள்ளியில் 2 குழந்தைகள் மட்டுமே படித்த நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் இதர ஆசிரியைகள் இணைந்து மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியை மேற்கொண்டு, தற்போது 73 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், பொன்னேரிப்பட்டி பள்ளியில் வீடு, வீடாகச் சென்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியை ஆசிரியைகள் யாரும் மேற்கொள்ளவில்லை.
 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 நாமக்கல் மாவட்டத்தில், 900-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், பொன்னேரிப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஒரு பள்ளியும் மாணவர்கள் யாருமின்றி செயல்பட்டு வருகிறது.
 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கூறியது: மாவட்டத்தில் இரு தொடக்கப் பள்ளிகள் மாணவர்கள் வருகையின்றி இருப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் உத்தரவு அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com