நாமக்கல்லில் ஆகஸ்ட் 3-இல் எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் திறப்பு
By DIN | Published On : 24th July 2019 09:49 AM | Last Updated : 24th July 2019 09:49 AM | அ+அ அ- |

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எஸ்.சி. எஸ்,டி. பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 3-இல் திறக்கப்படுகிறது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் விரைவு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்-1, எண்-2 உள்ளிட்ட 14 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூரில் கீழமை நீதிமன்றங்களும் உள்ளன.
பெரும்பாலான மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கான (எஸ்.சி.எஸ்.டி) சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கானது தற்போது மதுரை மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வழக்குகளை விரைந்து நடத்துவதற்காக, நாமக்கல்லில் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 3-இல் புதிய நீதிமன்றம் திறப்பு விழா நடைபெறுகிறது.