வாகன விபத்தில்லா நாளாக இன்று கொண்டாட வேண்டும்: காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
By DIN | Published On : 24th July 2019 09:46 AM | Last Updated : 24th July 2019 09:46 AM | அ+அ அ- |

விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, வாகன விபத்தில்லாத நாளாக புதன்கிழமை (ஜூலை 24) அமைய வேண்டும் என்றும் சாலை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் அர,அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்கான புதிய முயற்சியாக, புதன்கிழமையை (ஜூலை 24) வாகன விபத்தில்லா நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகள், சிக்னல்களை மதித்தும், சாலை விதிகளைக் கடைப்பிடித்தும், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கியும், வாகனங்களை இயக்கும்போது செல்லிடப் பேசியை பயன்படுத்தாமலும், மது- போதைபொருள்களைப் பயன்படுத்தாமல் வாகனங்களை இயக்கியும், பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு சீரான வேகத்தில் செல்ல வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர், பின்னிருக்கை பயணி ஆகிய இருவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்- வாகனத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் இருக்கை பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும். இரவு நேரப் பயணத்தின்போது, கண்கள் கூசும் அதிக வெளிச்சம் தரக் கூடிய விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. 18 வயது பூர்த்தி அடையாத இளஞ்சிறார்கள் வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
இரவு நேர பயணத்தில் ஓய்வுக்காக வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்தாமல் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பயணத்தின்போது வாகனங்கள் பழுது ஏற்பட்டால் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை புதன்கிழமையன்று வாகன ஓட்டிகள் மேற்கொள்வதன் மூலம், விபத்தில்லா நாளாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.