Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் தேர்தல்: வாக்களித்த மாணவ, மாணவியர்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அப்பள்ளி மாணவ, மாணவியர் வாக்களித்தனர்.
     நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், மேலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 101 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வி.அண்ணாதுரை மற்றும் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில், ஒவ்வொரு ஆண்டும் ஜனநாயகத் திருவிழா என்ற பெயரில், அரசியல், சமூகம், சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், நிகழாண்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை காலை நடைபெற்றது.
     இதில், சபாநாயகர், முதல்வர், கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை, உணவுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய 6 பதவிகளுக்கு 22 மாணவ, மாணவியர் மனுத் தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையரான தலைமை ஆசிரியர் மனுக்களைப் பரிசீலித்தார். இதில், 10 மாணவர்களின் மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், 12 மாணவர்களின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. அவர்களுக்கு எண் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.
     இந்தத் தேர்தலில், 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் மட்டுமே வாக்களித் தகுதியுடையவர்கள் என்பதால், போட்டியிடும் 12 பேரும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று பிற்பகலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, 3 மணிக்கு பள்ளி வளாகத்திலேயே வாக்குப் பதிவு நடைபெற்றது.தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
     இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் வி.அண்ணாதுரை கூறியது: மாணவர்களின் தன்னம்பிக்கை, தனித்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் ஜூலை மாதம் இதுபோன்ற தேர்தலை நடத்தி வருகிறோம். இப் பள்ளியானது சிறந்த பள்ளி என்ற பெருமையைப் பெற்ற பள்ளியாகும். தேர்தலைப் பொருத்தமட்டில் மாணவர்களை மகிழ்விப்பதற்காக அல்ல, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைப்போல், இங்கும் மாணவர்கள் பேரவையைக் கூட்டி, ஒவ்வொரு துறை அமைச்சரும் பள்ளியின் நலனுக்கு செய்ய வேண்டியவை குறித்தும், மாணவர்களிடம் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது தொடர்பாகவும் கேட்டறிவர் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai