Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 3,654 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 3,654 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை

    By DIN  |   Published on : 25th July 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த 3,654 மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     நாமக்கல் மாவட்டத்தில், 744 தொடக்கப் பள்ளிகள், 178 நடுநிலைப் பள்ளிகள், 70 உயர்நிலைப் பள்ளிகள், 105 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,097 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 67,832 மாணவர்கள், 69,344 மாணவியர் என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 176 பேர் படிக்கின்றனர். இப் பள்ளிகளில், 7,203 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
     அரசுப் பள்ளிகளில், கணினி வகுப்புகளுடன், நவீன தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
     கடந்த சில ஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டத்தில், 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாணவ, மாணவியர் சாதனை படைத்து வருகின்றனர். 2018 - 2019 - இல் 12-ஆம் வகுப்பில் 94.97 சதவீதம் பேரும், 10 - ஆம் வகுப்பில் 98.45 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 3-ஆவது இடத்தை பிடித்தது. அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள், சிறப்புகள் குறித்தும், கல்வித் துறைக்கு அரசு வழங்கும் திட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதனடிப்படையில், நிகழாண்டில், இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோருக்கு அதிகளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில் மட்டும் தனியார் பள்ளியில் இருந்து 3,654 மாணவ, மாணவியர், அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
     குறிப்பாக, ராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பாளையம் பள்ளியில் 108 மாணவர்கள், திருச்செங்கோடு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 82 மாணவியர், திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 73 மாணவர்கள், குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 61 மாணவியர், வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 55 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி, நாமக்கல் அழகுநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படித்த நிலையில், அப்பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியைகளின் தீவிர முயற்சியால் மாணவர் சேர்க்கை 73 - ஆக உயர்ந்தது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோரும், கல்விப் பயில மாணவ, மாணவியரும் ஆர்வம் காட்டுவதாக மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai