Enable Javscript for better performance
மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளியை நூலகமாக மாற்ற நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளியை நூலகமாக மாற்ற நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே மாணவர்கள் யாருமின்றி செயல்பட்டு வந்த அரசு தொடக்கப் பள்ளியை, நூலகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா தெரிவித்தார்.
     நாமக்கல் அருகே மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொன்னேரிப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 1970 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப் பள்ளியில், ஓரிரு ஆண்டுகளாக, ஒற்றை இலக்க அடிப்படையிலேயே மாணவர்கள் பயின்று வந்தனர். கடந்த ஆண்டு இரு மாணவர்கள் மட்டும் பயின்றனர். அவர்களும் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பில் சேர நடுநிலைப் பள்ளிக்குச் சென்று விட்டனர். இவ்வாறான சூழ்நிலையில், நிகழாண்டில் அப்பள்ளியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. தலைமை ஆசிரியையும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த ஒரு ஆசிரியையும் இடமாறுதலில் காளிப்பாளையம் பள்ளிக்குச் சென்று விட்டார்.
     மாணவர்கள் யாருமில்லாத நிலையில், தலைமை ஆசிரியை மட்டும் அப்பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்றார். இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பள்ளித் தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து விட்டு, தற்காலிகமாக பள்ளியை நூலகமாக்கும் முயற்சியை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு, இது தொடர்பான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து தகவல் வந்ததும் நூலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.
     இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கூறியது: மோகனூர் ஒன்றியத்தில் பொன்னேரிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தும்பல்பட்டி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும் நிகழாண்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. ஆசிரியர்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
     தலைமை ஆசிரியைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், அந்த இரு பள்ளிகளை நூலகமாக மாற்றுவது தொடர்பாகவும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
     ஜூலை 31 - ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது. தலைமை ஆசிரியைகளிடம் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். 31-ஆம் தேதிக்கு பிறகும் மாணவர்கள் சேர்க்கை இல்லாதபட்சத்தில், தற்காலிக அடிப்படையில் இரு பள்ளிகளும் நூலகமாக இயங்கும். மூடுவதற்கு பதில் நூலகமாக செயல்பட்டால் நான்கு பேர் படித்து பயன்பெறுவர். அடுத்த ஆண்டு மாணவர்கள் இப் பள்ளிகளில் சேர விரும்பும்பட்சத்தில், மீண்டும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். அதுமட்டுமின்றி ஒற்றை இலக்க எண்ணில் மாணவர்கள் இயங்கும் அரசுப் பள்ளிகளை கண்டறிந்து, அதன் தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை விரைவில் நடத்த இருக்கிறோம் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai