Enable Javscript for better performance
300 பள்ளிகளில் நீர் மேலாண்மைக் குழு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. மழை பெய்தால் மட்டுமே உயரக்கூடும். இதில், நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் சரிந்து விட்டது. பெரும்பாலான பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது. மழை நீரைச் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், 300 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளியிலும் நீர் மேலாண்மைக் குழு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர்களுக்கான நீர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
     இதில், முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா பேசியது(படம்): நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. முதல் கட்டமாக, தாங்கள் பணியாற்றும் பள்ளிகள் உள்ள கிராமங்களில், நீராதாரம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். அதனை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை தன்னார்வ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிப்பு அவசியத்தை, மாணவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், விழிப்புணர்வுப் பேரணிகள் மூலமாகவும் செய்ய வேண்டும். தங்கள் கிராமம் செழிப்பாக உள்ளது என நீர் மேலாண்மைக் குழு தலைவரைப் பார்த்து மக்கள் பாராட்டினாலே அது உங்கள் உழைப்புக் கிடைத்த வெற்றியாகும். நமக்கென்ன என்று அலட்சியம் காட்டாமல் நீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai