முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
உணவு வணிகம் செய்வோர் உரிமம் பெறுவது அவசியம்: ஆட்சியர் மு.ஆசியா மரியம்
By DIN | Published On : 30th July 2019 09:42 AM | Last Updated : 30th July 2019 09:42 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் உணவு வணிகம் மேற்கொள்பவர்கள், உணவுப் பாதுகாப்பு துறையில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவு வணிகம் மேற்கொள்பவர்களுக்காக, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-இல் இயற்றப்பட்டது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெறாமல் வணிகம் மேற்கொள்வது சட்டப்படி குற்றம்.
உணவு வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து உடனடியாக தங்களது வணிகத்துக்கு உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றிட வேண்டும்.
உரிமம் மற்றும் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும், மாறுதல் செய்து கொள்ளவும் இணையத்தில் மட்டுமே கட்டணம் செலுத்தி உரிமத்தை பெற வேண்டும். தவறினால் உணவுப் பாதுகாப்பு தரச்சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் உரிமம், பதிவு பெற்று தங்களது வியாபாரத்தை தொடங்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சேமித்து வைப்பவர்கள், வாகனங்களில் எடுத்துச்செல்பவர்கள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், பால்காரர்கள், கோழி, ஆடு, மீன் இறைச்சி விற்பனையாளர்கள், பழக்கடைகள், காய்கறி விற்பனையாளர்கள், ஐஸ்கிரீம், பழச்சாறு விற்பனையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி உணவு விடுதி, கேண்டீன்கள், திருமண மண்டப உணவுக் கூடங்கள், உணவகங்கள், மதுபானக் கூடங்கள், இட்லி, தோசைமாவு அரைத்து விற்பவர்கள், மளிகைக் கடைகள், விநியோகஸ்தர்கள், சேகோ தயாரிப்பாளர்கள், வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சமையலர்கள், சில்லி சிக்கன் விற்பனையாளர்கள், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிலையிலிருந்து பொதுமக்கள் உண்ணும் நிலைவரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் அனைவரும் உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிமம் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண் - 04286-281242, செல்லிடப்பேசி எண் - 94440-42322 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.