முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ஏரிகளில் கருவேல மரங்களை அகற்றி தூர்வார கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 09:27 AM | Last Updated : 30th July 2019 09:27 AM | அ+அ அ- |

மோகனூர் வட்டத்தில் உள்ள அரூர் மற்றும் ஆண்டாபுரம் ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என தரிசு நில விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்துக்குள்பட்ட அரூர் கிராமத்தில் உள்ள ஏரி, மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். 450 ஏக்கர் பரப்பு உள்ள இந்த ஏரியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முள்புதராய் காட்சியளிக்கின்றன. ஏரியில் உள்ள முள்புதர்களை அகற்றி தூர்வாரினால் மழைக் காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். ஏற்கெனவே ரூ.2 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பின்னர் பருவமழை தொடங்கியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று, ஆண்டாபுரத்தில் உள்ள ஏரி 91.36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியிலும் முள்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை அகற்றி ஏரியை ஆழப்படுத்தினால், ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் குடிநீர் பிரச்னையின்றி வாழ்வர்.
பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். எனவே, நீராதாரத்துக்கான வழிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.