பூக்களுக்கு அதிக விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 31st July 2019 08:43 AM | Last Updated : 31st July 2019 08:43 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ஒன்று ரூ.100-க்கும், முல்லை ரூ.300-க்கும் ஏலம் போயின.
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.350-க்கும், சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், அரளி கிலோ ரூ.300-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும், முல்லை கிலோ ரூ.500-க்கும் ஏலம் போயின. ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிக விலையில் ஏலம் போகும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் அதிகளவில் பூக்களை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.