காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஒன்றியத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பணிகளை

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஒன்றியத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 669 குடியிருப்புகள், ஆலாம்பாளையம், படவீடு, சங்ககிரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கான காவிரி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றுக்கு, 2018 நவ. 16-இல் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, குடிநீர் தேவைக்காக புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டமானது 2050-ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தொகை 3,59,978, இடைநிலை 2035 -ஆம் ஆண்டு மக்கள் தொகை 4,91,872 மற்றும் உச்சநிலை 2050-ஆம் ஆண்டு மக்கள் தொகை 6,61,149 பேர் பயன்பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தேவைப்படும் குடிநீரின் அளவு 2020-இல் 17.60 எம்.எல்.டி., 2035-இல் 25.51 எம்.எல்.டி., 2050-இல் 34.29 எம்.எல்.டி. ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கோட்டை கதவணைக்கு மேலே காவிரி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்படவுள்ளது. இந்த கிணற்றிலிருந்து 12,570 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 43.62 கி.மீ. தூரத்துக்கு நீருந்து குழாய்கள்  மூலம் ஊராட்சி தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படும். ஊராட்சி தரைமட்டத் தொட்டிகளிலிருந்து 575.42 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படவுள்ள குழாய்கள் மூலம் குடியிருப்புகளை ஒட்டியுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு  ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
சங்ககிரி வட்டம், புள்ளாக்கவுண்டன்பட்டி அருகில் காவிரிக்கரையில் திருச்செங்கோடு நகராட்சிக்கான தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியினையும், சங்ககிரி வட்டம், இராமக்கூடல் அருகில் காவிரிக்கரையில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்படும் பணியினையும், படவீடு பேரூராட்சிக்கான 3.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சின்ன ஆனங்கூரில் 6.75 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார். இதன் மூலம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளும், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சியும் பயன்பெறும். 
இதுகுறித்து ஆட்சியர் கூறியது: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டமானது  ரூ.399.46 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. திருச்செங்கோடு நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.87.21 கோடியில் அமைக்கப்படவுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எலந்தக்குட்டை, குப்பாண்டம்பாளையம், பல்லக்காப்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி, தட்டான்குட்டை, காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகள், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கருவேப்பம்பட்டி, வட்டூர், பட்லூர், புதுபுளியம்பட்டி, டி.கைலாசம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகள், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட அன்னை சத்யா நகர், அன்பு நகர், விஓசி நகர், ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 28 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டப்படவுள்ளன. 
இந்த புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளில்  உள்ள 345 குடியிருப்புகள், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், 15 கிராம ஊராட்சிகளில் உள்ள 324 குடியிருப்புகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு பேரூராட்சி மற்றும் சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி ஆகியவை பயன்பெறுகின்றன என்றார் ஆட்சியர்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் டி.குமார், உதவி நிர்வாக பொறியாளர் பெ.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com