சுடச்சுட

  

  ராசிபுரம் அருகேயுள்ள தண்ணீர்பந்தல்காடு பகுதியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.   இதனையடுத்து,  அப் பகுதி பொதுமக்கள் விபத்துகளைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  நாமக்கல் மாவட்டம்,   நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள தண்ணீர்பந்தல்காடு பகுதியைச் சேர்ந்தவர் வருதராஜ்,   கூலித் தொழிலாளி.  இவரது மனைவி மணிமேகலை.  இவர்களுக்கு 8 ம் வகுப்பு படிந்து வரும் காயத்ரி,  5 ம் வகுப்பு படித்து வரும் கலைவாணி என்ற இரு மகள்கள் உள்ளனர்.  
  இந் நிலையில்,  புதன்கிழமை தண்ணீர்பந்தல்காடு பகுதியில் சாலையோரம் உள்ள பஸ் நிறுத்தம் அருகே காயத்ரி நின்று கொண்டிருந்தபோது, அவ் வழியே சென்ற கார் சாலை தடுப்பு வேலியில் மோதியபடி வேகமாக நிற்காமல் சென்றது.  இதில் வேக கட்டுப்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சாலை இரும்பு தடுப்பு வேலி மாணவி காயத்ரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காயத்ரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
  இதனைக் கண்டித்து பள்ளி மாணவ,  மாணவியர், உறவினர்கள் என 100- க்கும் மேற்பட்டோர் வேகத் தடை அமைக்க வேண்டும்.   விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனையடுத்து,  சம்பவ இடம் சென்ற காவல்  துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேசி,  பின்னர் மறியலைக் கைவிட செய்தனர்.  இதனையடுத்து பல மணிநேரத்துக்குப் பின் மறியல் கைவிடப்பட்டது.  இந்த மறியல் போராட்டத்தினால் பொதுமக்கள்,  பள்ளி செல்லும் மாணவ,  மாணவியர் பல கி.மீ.  தூரம் நடந்தே சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai