இடிந்து விழும் நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகக் கட்டடம்

நாமக்கல்லில் பொதுப்பணித் துறை அலுவலகம் செயல்படும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடம்

நாமக்கல்லில் பொதுப்பணித் துறை அலுவலகம் செயல்படும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடம், எந்த நேரத்தில் இடிந்து விழப் போகிறதோ? என்ற அச்சத்துடனே அங்குள்ள ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் இருந்த நாமக்கல், கடந்த 1997-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.  புதிய மாவட்டமாக தொடங்கும்போதே ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டதால்,  வாடகையில் இயங்கி வந்த பெரும்பாலான அலுவலகங்கள் அங்கு சென்றன.  ஒரு சில கட்டடங்கள் மட்டும் நாமக்கல் நகரப் பகுதியில் செயல்பட்டு வந்தன.  பத்து ஆண்டுகளுக்கு முன் சாதாரணக் கட்டடத்தில் இயங்கி வந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகம்,  நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் போன்றவை, பல கோடி ரூபாய் செலவில் புதியதாகக் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  ஆனால்,  மாவட்டம் பிரிக்கப்படாதபோது ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிய பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,  தற்போதும் அதே கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு எதிரேயுள்ள இக் கட்டடமானது,  நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.  ஆரம்பத்தில் தொடக்கப் பள்ளியாகச் செயல்பட்டு வந்த கட்டடத்தை, பொதுப்பணித் துறை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கினர்.  இங்கு, சரபங்கா வடிநில உபகோட்டம்,  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு,  மின்சாரப் பணிகளுக்கான பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. 12 ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர்.  இந்த கட்டடம் ஓடுகள் வேய்ந்தவை என்பதால்,  காற்றின்போது ஓடுகள் பறப்பதும்,  மழை நேரத்தில் தண்ணீர் சொட்டு, 
சொட்டாக அலுவலகத்திற்குள் விழுவதுமாக உள்ளது என ஊழியர்களால் புகார் கூறப்படுகிறது. 
மேலும்,  தாழ்வான பகுதியில் அலுவலகம் இருப்பதால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடினால், அலுவலகத்துக்குள் ஆறுபோல் புகுந்து விடும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி,  கட்டடத்தை ஒட்டி வேம்பு,  யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.  அவை காற்றின்போது கட்டடத்தின் மீது முறிந்து விழுந்தால்,  பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். 
ஆவணங்கள் வைப்பதற்கான அறையோ,  பீரோவோ இல்லாததால் வெட்ட வெளியில் தூசுபடிந்தபடி காட்சியளிக்கின்றன.  ஆங்காங்கே ஓடுகள் உடைந்தும், கட்டடத்தின் உள்பகுதியில் கதவுகள் கரையான் படிந்தும்,  உடைந்தும் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.  எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்திலும்,  தூசு படிந்த அறைக்குள் தவித்தபடியும் ஆண், பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  தமிழக அரசின் முக்கியமான துறைகளில் பொதுப்பணித் துறையும் ஒன்று. அணைகள்,  ஆறுகள், ஏரிகள் மட்டுமின்றி,  அரசுத் துறை சார்ந்த கட்டடங்களுக்கு வரைபடம் தயாரித்து,  அந்தப் பணியைச் சிறப்புடன் செய்து கொடுத்து,  பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது பொதுப்பணித் துறை அதிகாரிகள்,  ஊழியர்களின் பணி.  அவ்வாறு செயல்படுபவர்களுக்கான கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பது அவ் வழியாகச் செல்வோரையும், அங்கு பல் வேறு பணிகளுக்காக வருவோரையும் கவலையடையச் செய்துள்ளது.
இது குறித்து,  பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,  அவர் கூறியது;  நூறு ஆண்டுகளுக்கு முன்பான கட்டடம் என்பதால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  கட்டடம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதாக இருந்தால், அந்தத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.  ஏற்கெனவே கட்டடத்தின் நிலை குறித்து அவர்களிடம் தெரிவித்தோம்.  செய்து கொடுக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.  ஆனால், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை.  ஆபத்து, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, சற்று பராமரிப்பு செய்தால் கட்டடம் நல்ல முறையில் இருக்கும்.  நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.  அது வந்து விட்டால், பராமரிப்புப் பணிகளைத் தொடங்கி விடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com