அரசுப் பள்ளிகளில் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு
By DIN | Published On : 14th June 2019 11:01 AM | Last Updated : 14th June 2019 11:01 AM | அ+அ அ- |

நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் மாவட்டத்தில், 158 அரசுப் பள்ளிகளில் கல்வித் துறை சார்ந்த நிகழ்ச்சிகளை, அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்வி நிகழ்ச்சிகள் அரசுப் பள்ளிகளில் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: பள்ளிக்கல்வித் துறை சார்பாக, அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 158 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் இணைப்புகள் கொடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் இந்தப் பணியை மேற்பார்வையிட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனி வட்டாட்சியர் (கேபிள் டி.வி.) ஜெ.சசிகலா மற்றும் தலைமை ஆசிரியர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.