பயிர்க் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நெல், மக்காச் சோளம்,  துவரை, உளுந்து உள்பட பல பயிர்களுக்கு, காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.

நாமக்கல், ஜூன் 13: பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நெல், மக்காச் சோளம்,  துவரை, உளுந்து உள்பட பல பயிர்களுக்கு, காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து  அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில்  அனைத்து வட்டாரங்களிலும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், 2019  - 2020 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில், குறுவை நெல் சாகுபடி, மக்காச் சோளம்,  துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை,  பருத்தி,  ராகி,  சோளம் ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். 
இம் மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்யக்கூடிய குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும்.  பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் கடன் வழங்கும் வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 
பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே மாதிரியாக பிரீமியம்
வசூலிக்கப்படும். 
மேலும், இழப்பீட்டுக்கு தகுந்தாற்போல்,  இழப்பீடு தொகையானது கிடைக்கும்.  விதைப்பு செய்ய இயலாமை,  விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு,  புயல்,  மழை,  மண்சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படக்கூடிய இழப்புக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஒரு ஏக்கர் நெல்லுக்கு - ரூ.627,  உளுந்துக்கு- ரூ.315 மற்றும் பாசிப் பயறுக்கு -ரூ.315 என வரும்  ஆக.16-ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்.  மேலும் மக்காச்சோளத்துக்கு - ரூ.507,  சோளத்துக்கு -  ரூ.294, துவரைக்கு ரூ.315, ராகிக்கு - ரூ.258,  நிலக்கடலைக்கு ரூ.496 மற்றும் பருத்திக்கு  ரூ.1,290 - பிரீமியத் தொகையை ஆக.31--க்குள் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து  "விதைப்பு செய்ய இருக்கிறார்' என்ற விதைப்புச் சான்றை பெற்று விதைப்பிற்கு முன்பாகவும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அளவுடைய புகைப் படம்,  நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார்  அட்டை நகல்,  நில உரிமை பட்டா அடங்கல் மற்றும் விதைப்புச் சான்று  ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள்,  வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய காப்பீட்டுத் பிரீமியத் தொகையை, சேவைக் கட்டணமின்றி செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இடர்பாடு ஏற்படும் காலத்தில் காப்பீட்டுத் தொகையை பெற்று பயனடைய முடியும்.
கூட்டுறவு சங்கங்களில் விதிகளை மீறி சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஆட்சியருக்கு  புகார் தெரிவிக்கலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.  பயிர்க் காப்பீட்டு விவரங்களை தங்கள் செல்லிடப்பேசியில் உள்ள உழவன் செயலியிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com