தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
அவர் பேசியது: தென்மேற்குப் பருவமழை மற்றும் புயல் ஆகியவற்றால் பெரு மழை பெய்யும் சூழ்நிலைகளிலும், அதனால் ஏற்படும்  வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும்,  இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும் சரியாக திட்டமிட்டு பேரிடர் முன்னேற்பாட்டுப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். 
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட கூடிய பகுதிகள், மிகுந்த பாதிப்பு ஏற்படக்கூடியவை, அதிக பாதிப்பு ஏற்படக் கூடியவை, குறைந்த பாதிப்பு ஏற்படக் கூடியவை என வகைப்படுத்தி பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் மரம் வெட்டுதல் மற்றும் அப்புறப்படுத்தல் தொடர்பாக முதன்மை பொறுப்பாளர்கள் பற்றிய விவரங்களை தயார் செய்தல் வேண்டும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அனைத்து நிவாரண மையங்களையும் உடனடியாக தணிக்கை செய்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலர்கள் மூலம் கிராம அளவில் முதன்மை பொறுப்பாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபர்களின் விவரங்களை வைத்திருக்க வேண்டும். 
தகவல் தொடர்புக்கு தொலைபேசி, பேக்ஸ், மின்னஞ்சல், வயர்லெஸ் சாதனங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானது என்பதால், அவற்றின் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
மழை,  சூறைக் காற்றினால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான அறுவை இயந்திரங்கள், அப்புறப்படுத்த வாகனங்கள் ஆகியவற்றின் இருப்பிடம் மற்றும் உரிமையாளர்களின் விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  
ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை விரைவாக வெளியேற்றும் பணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் நீர் நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரியான முறையில் அவற்றைப் பாதுகாத்திட வேண்டும். ஏரிகள், நீர்நிலைகள், பிரதான கால்வாய்கள், சிறுபாசனக் கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி தங்குதடையின்றி நீர் ஆதாரப் பகுதிகளில் மழைநீரை சேகரிக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெருமழை வெள்ள நீர் தடையின்றி செல்லும் வகையில் கழிவுநீர் பாதைகளை சீர் செய்ய வேண்டும். அனைத்துப் பள்ளிகளில் தீத் தடுப்பு குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினரின் ஒத்துழைப்புடன் நடத்திட வேண்டும். 
மேலும், சுகாதாரத் துறை, மின்வாரியம், போக்குவரத்து, காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் பருவமழை பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.  
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com