யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி
By DIN | Published On : 22nd June 2019 09:21 AM | Last Updated : 22nd June 2019 09:21 AM | அ+அ அ- |

சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, நாமக்கல்லைச் சேர்ந்த சிறுமி பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நாமக்கல்லைச் சேர்ந்த எம்.சங்கரநாராயணன் - பிரியா தம்பதியரின் மகள் எஸ்.சஹானா (10). தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதல் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்ட தொடங்கினார். இதற்காக, பிரத்யேக யோகா ஆசிரியர் மூலம் கற்று வருகிறார். தன்னார்வ அமைப்புகள் நடத்திய யோகா போட்டிகளில் பலவற்றில் பங்கேற்று சிறப்பு பரிசுகளை வென்றுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகாவை கற்க வேண்டும், நாள்தோறும் அதைச் செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இச் சிறுமி தனது இல்லத்தில் இருந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்து, அதை சமூக வலைத் தளங்கள் மூலம்
வெளியிட்டார்.
இரு கைகளை தரையில் ஊன்றி, கால்களை மடக்கியபடி மூன்று நிமிடங்கள் அசையாமல் நிற்கும் ஆசனம், வீட்டின் கதவுப் பகுதியில் ஒரு காலை ஊன்றியும், மறு காலால் அதன் எல்லையை தொட்டபடி 5 நிமிடங்கள் நின்றவாறும். மேலும், உடல்களை வளைத்து, கால்களை மடக்கி தலையை தொட்டவாறு செய்து காட்டும் ஹஸ்டாசனம் எனும் ஆசனத்தையும் செய்து காண்பித்துள்ளார். யோகா தினத்தையொட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், யோகாவை பரப்பும் விதமாக பெற்றோர் மூலம் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டார்.
இது குறித்து, சிறுமி எஸ்.சஹானா கூறியது; ஓட்டப்பந்தயம், யோகா, இறகுப்பந்து போட்டிகளில் சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. அதிலும் யோகா கலையை ஆர்வமுடன் கற்று வருகிறேன். சென்னையில் நடைபெற்ற யோகா போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். யோகாவில், பத்மாசனம், தடசனம், படா - ஹஸ்டாசனம், என பல்வேறு ஆசனங்களை கற்றுள்ளேன். அவற்றை பள்ளி செல்லும் முன்பாக தினமும் செய்கிறேன். யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமடையும், சுறுசுறுப்பு அதிகரிக்கும். சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக யோகாவை செய்து காண்பிக்கிறேன். தினமும் காலையில் எழுந்தவுடன் வழக்கமான கடமைகளில் ஒன்றாக யோகாவையும் செய்து வந்தால் நலம் பெறலாம் என்றார்.