ராசிபுரம் உழவர் சந்தையை மூடும் எண்ணமில்லை: ஆணையர்
By DIN | Published On : 22nd June 2019 09:19 AM | Last Updated : 22nd June 2019 09:19 AM | அ+அ அ- |

ராசிபுரம் உழவர் சந்தை மூடப்படுகிறது என தகவல் பரவியதையடுத்து தி.மு.க.வினர், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தையொட்டி தி.மு.க. ஆட்சியில் உழவர் சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராசிபுரம் உழவர் சந்தை நடைபெறும் இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுவதால், உழவர் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மேலும் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் காய்கறிக் கடைகள் அமைத்து விற்பனை செய்து கொள்ளவும் நகராட்சி அனுமதியளித்துள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு எதிராக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகப் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து தி.மு.க.வினர் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜயாஸ்ரீ-யிடம் உழவர் சந்தையை மாற்றக் கூடாது என மனு அளித்தனர். தி.மு.க. நகரச் செயலர் என்.ஆர்.சங்கர் தலைமையில், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு உள்ளிட்ட திரளான தி.மு.க.வினர் இந்த மனுவை அளித்தனர். உழவர் சந்தைக்கு வெளியே கடை அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். உழவர் சந்தையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை செய்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
நகராட்சி ஆணையாளர் மறுப்பு: இந்நிலையில், உழவர் சந்தையை முடக்கும் எண்ணம் நகராட்சிக்கு இல்லை. இது போன்ற தகவல் தவறானது என ஆணையர் விஜயாஸ்ரீ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது: உழவர் சந்தைக்கான கட்டடம் நகராட்சி சார்பில் 1.42 ஏக்கர் நிலப்பரப்பில், 96 கடைகள், விற்பனை மேடைகள், சுற்றுச்சுவர்கள் என ஒருங்கிணைந்த சிறு, நடுத்தர நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் கடன் பெற்று கட்டித்தரப்பட்டது. இந்தக் கடனை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு 2000 ஆண்டு முதல் இதுவரை நகராட்சிக்கு செலுத்தவில்லை. குத்தகை அடிப்படையில் செலுத்த வேண்டிய இதற்கான நிலுவைத் தொகை, வட்டி, அபராத வட்டி என இதுவரை ரூ.1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரத்து 720 நகராட்சிக்கு வேளாண் விற்பனைக் குழு, வேளாண் வணிகத்துறை செலுத்த வேண்டும்.
இதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தான் கேட்டு வலியுறுத்தி வருகிறோம். மேலும் இது நகராட்சிக்குச் சொந்தமான இடம் என்பதால், நகராட்சி பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிக்காக உழவர் சந்தையின் பயன்படுத்தாத இடத்தை மீண்டும் நகராட்சி வசம் ஒப்படைக்க கேட்டு வருகிறோம் என்றார்.
இதனால் உழவர் சந்தையை மூடும் எண்ணம் எதுவும் நகராட்சிக்கு இல்லை என்றார்.