கணினி ஆசிரியர் தேர்வு மையத்தில் இணையதள சேவை குறைபாடு: தேர்வர்கள் சாலை மறியல்
By DIN | Published On : 24th June 2019 10:10 AM | Last Updated : 24th June 2019 10:10 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை கணினி ஆசிரியர் தேர்வின்போது இணையதள சேவை குறைபாடு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு வரை நடைபெற்றது.
இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 2, 270 பேர் கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்திருந்தனர். இதில் 770 பேர் தேர்வு மையத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினர். இணையதள சேவை குறைபாடு காரணமாக 1, 500 பேர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் இணையதள சேவை குறைபாடு காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ப. உஷாதேவி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட தேர்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இணையதள சேவை குறைபாடு காரணமாக தேர்வு மையத்தில் முறையாக யாரும் பதிலும் அளிக்கவில்லை என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் தேர்வர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பாதிக்கப்பட்ட தேர்வர்கள் இணையதளம் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக அவர் அளித்த வாக்குறுதியின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தேர்வு எழுத மையத்தில் காத்திருந்தனர். மாலை 5 மணிவரை காத்திருந்து தேர்வுக்குத் தயாரான போதும் மீண்டும் இணையதளம் செயல்படாததால் தேர்வு நடக்கவில்லை. இதையடுத்து தேர்வர்கள் மீண்டும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இந்தப் பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அதன்படி தேர்வு குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.