குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 24th June 2019 10:07 AM | Last Updated : 24th June 2019 10:07 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலாக உள்ள பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாகச் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் காவிரி பாலத்தைக் கடந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள காகித ஆலைக்கும், பல்வேறு நூற்பு ஆலைகளும், பள்ளி, கல்லூரிகளும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை காவிரிப் பாலத்தில் இருந்து பரமத்தி வேலூர் நகர் பகுதிக்குள் வரும் பிரிவு சாலை அருகே கோழிக் கழிவுகள்,திருமண மண்டபங்களில் இருந்து கொட்டப்பட்டும் கழிவுகள் மற்றும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்று விடுகின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிவதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் வருவது கூட தெரியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும், மூக்கை மூடியபடியும் செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்கவும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும் குப்பைகளை அப்புறப்படுத்தி அப் பகுதியை வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பராமரிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.