ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு கோரிக்கை

விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில், தமிழக அரசு

விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில், தமிழக அரசு உடனடியாக திருத்தம் கொண்டு வரவேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் நலனுக்காக, விலையில்லா பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக நேரம், காலம் பாராமல் உழைக்கும் ஆசிரியர்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் முதன் முதலாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், பதவி உயர்வுபெற்ற பெரும்பாலான ஆசிரியர்களும் சொந்த ஊருக்கு அருகில் பணி நியமனம் கிடைக்காமல், தங்களது குடும்பத்தினரை விட்டு பிரிந்து தொலைதூர மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்குபெற்று சொந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணி மாறுதல் பெறுவர்.
அதேபோல் நிகழாண்டுக்கான கலந்தாய்வு இருக்கும் என ஆசிரியர்கள் எண்ணியிருந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட  கலந்தாய்வு நெறிமுறைகள் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், 2019 ஜூன் 1-ஆம் தேதியன்று தற்போது பணிபுரியும் பள்ளியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதி அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் கலந்தாய்வில், பணி மாறுதல் பெற்றவர்கள் கூட நடப்பாண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மட்டுமே இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.
எனவே, இந்த விதியை தளர்த்த வேண்டும். ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்தாலே மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்ற வகையில் அதில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். 2018 ஜூன் மாதத்தில் பணி நிரவல் மூலம் தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு  கட்டாய பணி மாறுதலில் அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு, நிகழாண்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.   
ஒவ்வொரு பணி தொகுப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற விதியையும், நிர்வாக காரணங்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த அலுவலர்களால், ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்ற அரசின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com