சுடச்சுட

  

  மனைவி, மாமியார், குழந்தையை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி: கணினி பொறியாளர் தலைமறைவு

  By DIN  |   Published on : 26th June 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனைவி,  மாமியார், 11 மாத குழந்தையை மின்சாரம் பாய்ச்சி  கொலை செய்ய முயற்சி செய்ததாக, கணினி பொறியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  நாமக்கல் ராமாவரம்புதூர் அருகே அன்புநகர் சாவடித் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி வளர்மதி(52). இவர்களுக்கு கணினி பொறியாளர் ரூபிகா(29) என்ற மகளும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். தங்கவேலு லாரி தொழில் செய்துவந்தார். 
  ரூபிகாவுக்கும், கரூர் மாவட்டத்துக்குள்பட்ட மூலிமங்கலத்தைச் சேர்ந்த கணினி பொறியாளரான சுப்பிரமணியன் மகன் சிவா என்ற சிவப்பிரகாசத்துக்கும் (35)   மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
  திருமணத்தின்போது வரதட்சிணையை கொடுத்திருந்த நிலையில், மேலும் வரதட்சிணை கேட்டு ரூபிகாவை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தினராம். 
  இந்தச் சூழ்நிலையில்,  2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கர்ப்பம் தரித்த நிலையில் ரூபிகா, நாமக்கல்லில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார். ஓரிரு நாள்களில் மாமனார் வீட்டுக்கு வந்த சிவப்பிரகாசம், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாராம்.  அப்போது தங்கவேலுக்கும், சிவப்பிரகாசத்துக்கும் இடையே நடந்த மோதலில் தங்கவேலு கொலை செய்யப்பட்டார். 
  இதுதொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து,  சிவப்பிரகாசத்தை கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு  ஜாமீனில் வெளியே வந்த அவர் தன்னுடன் வாழ வருமாறு ரூபிகாவை அழைத்தாராம். ஆனால் வரமாட்டேன் என ரூபிகா மறுத்து விட்டாராம்.
  இந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிவப்பிரகாசம் முகத்தை மூடியபடி,  ரூபிகா வீட்டின் முன்புறம் மறைந்து நின்றார்.  வாசல் தெளிப்பதற்காக வந்த வளர்மதி  கூச்சலிடவே,  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட  சிவப்பிரகாசம் அங்கிருந்து சென்று விட்டார். 
  பொழுது விடிந்த நிலையில், அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரத்தைக் கடத்தும் சிறிய கம்பி வீட்டின் ஜன்னல் கம்பியில் கட்டியிருப்பதை கண்டு ரூபிகாவும், வளர்மதியும் பார்த்துள்ளனர். 
  இதைத் தொடர்ந்து, நாமக்கல் காவல் நிலையத்தில் ரூபிகா அளித்த புகார் மனுவில், தனது தந்தையை கொன்றது போல்,  தன்னையும், தனது தாயையும்,  குழந்தையையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்துள்ளார் என கூறியிருந்தனர். 
  இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவப்பிரகாசம் தலைமறைவாகி விட்டார். 
  இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறியது;-
  தங்கவேலு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பது ரூபிகாவும்,  வளர்மதியும்தான். வழக்கில் இருந்து விடுதலை பெற,  இருவரையும் கொலை செய்து விட்டால் தப்பித்து விடலாம் என்ற நோக்கில் சிவப்பிரகாசம் திட்டமிட்டுள்ளார்.
  இதற்காக மின்மாற்றியில் இருந்து கம்பி மூலமாக மின்சாரத்தைக் கொண்டு சென்று அவர்கள் உறங்கும் கட்டிலில் செலுத்த முற்பட்டுள்ளார்.
  சம்பவத்தன்று அதிகாலையில், சிவப்பிரகாசத்தை சுற்றிவளைத்தபோது குழந்தையை பார்க்கலாம் என்று வந்தேன் எனக்கூறி தப்பிச்சென்று விட்டார்.  போலீஸ் தனிப்படை கரூருக்கு சென்றபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இருப்பினும் சிவப்பிரகாசத்தை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai