பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வங்கிக் கடன்: ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் தகவல்

சிறு, குறு, நடுத்தரத் தொழில் புரிபவர்களுக்கு  பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரையில் வங்கிக் கடனுதவி

சிறு, குறு, நடுத்தரத் தொழில் புரிபவர்களுக்கு  பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரையில் வங்கிக் கடனுதவி அளிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி சென்னை கிளை பொதுமேலாளர் என்.மோகனா தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியும்,  மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கமும்  இணைந்து நடத்திய விழிப்புணர்வுக் கூட்டம் நாமக்கல் கோஸ்டல் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,  என்.மோகனா பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கும், சுயதொழில் செய்து வருவோருக்கும், வங்கிகள் பரிவர்த்தனை நடைமுறையில் இருக்கும் சிரமங்கள் பற்றியும், கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பொதுமேலாளர், தொழில் முனைவோரிடம் கேட்டறிந்தார். 
ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, கட்டணங்கள் விதிக்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என தொழில் முனைவோர் வலியுறுத்தியதற்கு, அது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றார். 
இதைத் தொடர்ந்து,  மோகனா பேசியது:-
ரூ.10 லட்சம்  வரையில்  அனைத்து வங்கிகளிலும் பிணை இல்லாமல் தொழில் முனைவோர் கடன் வசதி பெறலாம்.  இதைப் பயன்படுத்தி நல்ல தொழில்களை தொடங்க வேண்டும்.  சில வங்கிகளின் திட்ட அறிக்கை சிறப்பாக இருக்கும்பட்சத்தில், ரூ.2 கோடி வரை பிணை இல்லாமல் கடன்களை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. 
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.6926.08 கோடி அளவுக்குக் கடன் வழங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு மட்டும் ரூ.1036.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
தொழில் தொடங்க இருப்பவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில்,  இதுபோன்ற விழிப்புணர்வுக் கூட்டங்கள், குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டு வருகிறது என்றார். 
முன்னதாக,  வங்கிகளில் கடன் பெற்று சுய தொழில் செய்து வரும் தொழில் முனைவோரின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சியை திறந்து வைத்து அவர் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம். முத்தரசன், துணைப் பொது மேலாளர் தாமோதரன், நபார்டு மாவட்ட மேலாளர் தினேஷ், இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் சேதுராமன், நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கச் செயலர் சண்முகம், நிர்வாகிகள் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com