"வேர்கள் இல்லாத பரந்து விரிந்த ஆலமரம் இந்து மதம்'
By DIN | Published On : 28th June 2019 08:42 AM | Last Updated : 28th June 2019 08:42 AM | அ+அ அ- |

இந்து மதம் என்பது அழிவற்றது, வேர்கள் இல்லாத பரந்து விரிந்த ஆலமரம் போன்றது என நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரை நிகழ்த்தப்பட்டது.
சின்மயா மிஷன் சார்பில், பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா ஆசியுடன், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில், அழிவற்ற இந்து மதத்தின் பெருமைகள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நாகை சின்மயா மிஷனைச் சார்ந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தாஜி சொற்பொழிவாற்றியது; புனித நூல் என நாம் பகவத்கீதையைக் குறிப்பிட்டாலும், ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி. மற்ற மதங்கள் ஒரு நூல், ஒரு வழிபாடு என்ற முறையைக் கொண்டுள்ளன. ஆனால், இந்து மதம் பரந்து விரிந்த ஆலமரம் போன்றது. இம் மதத்தில் அனைத்தும் பெற முடியும். அறம், பொருள், இன்பம், வீடு என்பதன் அடிப்படையில் வாழ்ந்து ஒவ்வொருவரும் மோட்ச நிலையை அடைய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் கே.கே.பி.நல்லதம்பி, நாமக்கல் தமிழ் சங்கத் தலைவர் மருத்துவர் ஆர்.குழந்தைவேலு, மல்லிகா குழந்தைவேலு, குரு மூவிஸ் மணி, ஆர்.எஸ்.எஸ். சுப்பிரமணி, காங்கிரஸ் பிரமுகர் சித்திக் மற்றும் பக்தர்கள், ஆன்மீக அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை வாழ்வில் வெற்றி பெற அனுமன் காட்டும் வழிகள் என்ற தலைப்பிலும், சனிக்கிழமையன்று வாழ்வில் அமைதி பெற பகவத்கீதை காட்டும் நெறிகள் என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. பங்கேற்பதற்கு அனுமதி இலவசம். பக்தர்களும், ஆன்மிகத்தில் விருப்பம் கொண்டவர்களும் பெரும் திரளாக சொற்பொழிவில் பங்கேற்க வேண்டும் என சின்மயா மிஷன் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.