நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 08:50 AM | Last Updated : 02nd March 2019 08:50 AM | அ+அ அ- |

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், பயோமெட்ரிக் கார்டுகளை அமல்படுத்த வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பி.மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.தண்டபாணி, மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுவோருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தனித் துறை ஏற்படுத்துவதுடன் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊதியக் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பயோமெட்ரிக் கார்டுகளை அமல்படுத்த வேண்டும். விற்பனையாளர்களுக்கு விதிக்கும் இருமடங்கு அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை நாள்களில் அத்தியாவசிய பொருள் விற்பனையைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.