உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்
By DIN | Published On : 04th March 2019 09:03 AM | Last Updated : 04th March 2019 09:03 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது .
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நெடுஞ்சாலையோரங்களில் புதைவடக் கம்பிகள் மூலம் மின்சாரத்தைத் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த மாதம் குமாரபாளையத்தை அடுத்த படைவீடு, சாமண்டூரில் காத்திருப்புப் போராட்டம் மற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வித முடிவும் ஏற்படாததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் மீண்டும் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இப்போராட்டத்துக்கு, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
இக்காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 10 விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்துக்கு 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.