சுடச்சுட

  

  சிற்பக்கலை வடிவமைப்பில் சிறந்துவிளங்கும் நாமக்கல் கூலிப்பட்டி!

  By DIN  |   Published on : 16th March 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுவாமி சிலைகள் வடித்தாலும்,  கோயிலின் கர்ப்ப கிரகத்தில் வைக்கும் சுவாமி சிலைகளை வடிவமைப்பதில் நாமக்கல் கூலிப்பட்டி சிற்பக் கலைஞர்கள் வல்லவர்கள் என்றால் மிகையாகாது. 
  பல மாநிலங்களைக் கடந்து,  உத்தரகண்ட் மாநிலம்,  ஹரித்துவாரில்  தமிழரின் பெருமைகளைச் சொல்லும் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் தான். 
  ஆந்திரம்,  கர்நாடக மாநிலங்களில் அங்குள்ள மக்கள் வணங்கி வழிபடும் சுவாமி சிலைகளில் பல,  இங்குள்ள கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவானவையே. 
  நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள கூலிப்பட்டியில் மட்டும் 15 - க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளன.   சிவன்,  ஆஞ்சநேயர்,   முருகன், விநாயகர்,  பெருமாள்,  அய்யனார்,  கருப்பணார்,   மாரியம்மன் மற்றும் யானை,  குதிரை,  தேர்,  கோபுரம் என பல்வேறு சிலைகள் நாள்தோறும் வடிவமைக்கப்படுகின்றன.  தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுப்பதற்காக கூலிப்பட்டிக்கு பலர் வந்து செல்கின்றனர்.
  இங்கு,  தை மாதம் முதல் பங்குனி மாதம்  வரையில் முருகன் சிலைகளும்,  சித்திரை,  வைகாசி,  ஆனி மாதங்களில் சிவன்,  விநாயகர் சிலைகளும்,  ஆடி, ஆவணி,  புரட்டாசி மாதங்களில் அம்மன்,  பெருமாள் சிலைகளும்,  ஐப்பசி, மார்கழி மாதங்களில் அனைத்து விதமான சுவாமி சிலைகளை செய்வதற்காக ஆர்டர் கொடுப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி,  சுதந்திரத்துக்கு  பாடுபட்ட தலைவர்கள்,   மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளையும் செய்து கொடுக்கிறோம் என்கிறார் சிற்பக் கலைஞர் திருப்பதி.
  அவர் மேலும் கூறியது:  சுவாமி சிலைகள் இங்கு அதிகம் வடிவமைக்கப்படுகின்றன. பெரிய,  சிறிய அளவில் 15 முதல் 20 வரையிலான சிற்பக்கூடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம்  ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து பாறைகளை எடுத்து வந்து,  அதற்கென உள்ள இயந்திரங்களில் கொடுத்து சிலைக்கு தகுந்தாற்போல் வெட்டி எடுப்போம். பின்னர்,  சுவாமி படங்களை வரைந்து சிறிது சிறிதாக வெட்டி எடுப்போம்.  3 அடி, 4 அடி உயரம் கொண்ட சிலைகள் ஒரு மாதங்களில் முடிந்து விடும்.  6 அடி, 8 அடி என்றால், 6 மாதங்களாகி விடும்.
  தற்போது,  கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர் ராஜ்குமாரின் உறவினர் கண்ணப்பநாயனார் சிலை வடிக்க ஆர்டர் கொடுத்துள்ளார்.  அதற்கான பணி நடந்து வருகிறது.  சிலையின் உயரம்,  வேலைப்பாடுகளைப் பொருத்து விலை நிர்ணயிப்போம்.  ஒரு சிலை செய்து கொடுத்தால், சிலையைப் பொருத்து சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும்.
  சாலையோரம்  அமர்ந்து தான் சிலைகளை செய்து வருகிறோம்.  சிற்பக்கூடத்துக்கென அரசு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தால் நல்லது.  உடலில் காயம்படாத நாள்களே கிடையாது. இருந்தபோதிலும்,  கோயில்களில் சுவாமியை வணங்கும்போது மக்கள் அடையும் பரவசமே, எங்களது உழைப்புக்கான வெற்றி என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai