சுடச்சுட

  

  நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் 3.34 கிலோ வெள்ளி, ரூ.1.52 லட்சம் பறிமுதல்

  By DIN  |   Published on : 16th March 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எருமப்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையில், 3.34 கிலோ வெள்ளிப் பொருள்கள்,   ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
  மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து,  நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர்,  நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரையில், நாமக்கல்,  திருச்செங்கோடு, பரமத்திவேலூர்,  சங்ககிரி,  சேந்தமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில், ரொக்கம்,  வெள்ளி என  ரூ.12 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
  இந்த நிலையில், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட எருமப்பட்டி ஒன்றியம்,  பவித்திரம் ஏரிக்கரைப் பகுதியில்,  நிலை கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த கே.செங்கோட்டுவேல் தலைமையில் போலீஸார் அவ் வழியாகச் சென்ற வாகனங்களைச் சோதனையிட்டனர்.  அப்போது,  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் இருந்து வந்த பூபதிராஜா (35) என்பவரின் காரைச் சோதனையிட்டனர். 
  அதில், வெள்ளி அரைஞாண்கயிறு,  கொலுசுகள் என 1.587 கிலோ கிராம் பழைய வெள்ளி,  மெட்டி, கொலுசு, மோதிரங்கள் என  1.830 கிராம் புதிய வெள்ளி,  5 கிராம் தங்கம் உள்ளிட்ட பொருள்கள் எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.  அவற்றை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்புக் குழுவினர், சேந்தமங்கலம் தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் மு.துரையிடம் ஒப்படைத்தனர்.
      இதேபோல்,  பவித்திரம் ஏரிக்கரையில்,  துறையூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த இளைஞரை பிடித்து நிலை கண்காணிப்புக் குழுவினர் விசாரித்தனர்.  அவரது வாகனத்தைச் சோதனையிட்டபோது, ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் ரூ.1.52 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது.  அவரிடம் விசாரித்தபோது,  நாமக்கல் அருகே பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துநாயக்கர் மகன் சிவக்குமார்  (27) என்பதும்,   முட்டை விற்பனை செய்த பணத்தை வசூலித்து வந்ததாகவும் தெரிவித்தார்.   இதையடுத்து,  பறிமுதல் செய்யப்பட்ட 3.34 கிலோ வெள்ளிப் பொருள்கள்,  ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.  உரிய ஆவணங்களைக் காண்பித்து அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai