சுடச்சுட

  

  நாமக்கல் மக்களவைத் தொகுதி: 140 மண்டலங்களாகப் பிரித்து தேர்தல் பணி: ஆட்சியர்

  By DIN  |   Published on : 16th March 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத்  தொகுதிகளும், 140 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.  இவற்றில் நியமிக்கப்படும் அலுவலர்கள் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
  நாமக்கல்  மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மண்டல மற்றும் துணை மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்,  சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி உள்ளிட்டோர் தேர்தல் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
  ஆட்சியர் பேசியது:  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இத்தொகுதியில்  சங்ககிரி,  ராசிபுரம்  (எஸ்சி),  சேந்தமங்கலம் (எஸ்டி),  நாமக்கல்,  பரமத்தி  வேலூர்,  திருச்செங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை 140 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன. 
  இவற்றில் பணியாற்றும் மண்டல மற்றும் துணை மண்டல அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி தற்போது நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளின் விவரங்கள், வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் (விவிபேட்) செயல்பாடுகள் உள்ளிட்டவற்றின் செயல்முறை விளக்கங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். 
  சார்-ஆட்சியர் பேசும்போது:  தேர்தல் பணிக்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உதவித் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வோர் அலுவலரின் பொறுப்பில் 10 முதல் 15 வரையிலான வாக்குச்சாவடிகள் இடம்பெறும்.  வாக்குப் பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களை காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருள்களை சரியான முறையில் பாதுகாத்தல், வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  மேலும்,  வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அது சார்ந்த பொருள்களை பெற்று வாக்கு எண்ணும் மையத்தில் திரும்ப ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தாங்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து, அந்தந்த மண்டல அலுவலர்கள் விரைவில் பயிற்சி அளிப்பார்கள் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai