ரத்த அணுக்களை தானம் செய்த பெண் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தலசீமியா எனும் ரத்த அணுக்கள் குறைபாடு கொண்ட குழந்தைக்கு உதவும் வகையில், தன்னுடைய ரத்த அணுக்களை

தலசீமியா எனும் ரத்த அணுக்கள் குறைபாடு கொண்ட குழந்தைக்கு உதவும் வகையில், தன்னுடைய ரத்த அணுக்களை தானமாக வழங்கிய பெண் காவலரை, மாவட்டக்
காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.
தமிழகத்தில் லட்சம் குழந்தைகளில்,  ஒருவருக்கு தலசீமியா எனும் ரத்த அணுக்கள் குறைபாடு நோய் உள்ளது. இவ்வகையான குழந்தைகளுக்கு,  20 நாள்களுக்கு ஒரு முறை புதிதாக ரத்தம் செலுத்த வேண்டும்.  தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு, இந்த  நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அக்குழந்தையின் பெற்றோர்,  சென்னையில் உள்ள ரத்த அணுக்கள் தான பதிவு மையத்தில் குழந்தைக்கு உதவிடக் கோரிக்கை விடுத்தனர்.
அந்நிறுவனம்,  தமிழக காவல்துறைத் தலைவர் அனுமதியுடன், மாநிலம் முழுவதும் ரத்த அணுக்கள் தானம் கொடுக்க விருப்பமுள்ள காவலர்களின்  உமிழ்நீர் மாதிரியைச் சேகரித்து, குழந்தையின் ரத்த அணுக்களுடன் ஒப்பிட்டுப் பரிசோதித்து வந்தது. அவ்வாறு ஒரே மாதிரியான ரத்த அணுக்கள் இருக்கும்பட்சத்தில், குழந்தையின் எலும்பு மஜ்ஜையில் செலுத்தி சிகிச்சையளித்தால்  தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியுடன் ரத்தம் உற்பத்தியாகி தலசீமியா நோய் முற்றிலும் குணமாகிவிடும். மரபு அணுக்கள் பாதிக்கப்படுவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுகிறது. 
ஆயிரக்கணக்கான காவலர்களின் உமிழ்நீர் மாதிரி சோதனையில், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் வாசுகி என்பவரின் உமிழ்நீர் மாதிரியும், குழந்தையினுடையதும் ஒத்துப்போவது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், அவரது ரத்த அணுக்கள் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தப்பட்டது. இதன்மூலம் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இத்தகவல் அறிந்து, குழந்தைக்கு மறுவாழ்வு வழங்கிய பெண் காவலர் வாசுகியை அழைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டுச் சான்றிதழுடன், சிறப்பு வெகுமதியையும் வழங்கினார். மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் அவருடைய கருணை உள்ளத்துக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com