பணப் பரிவர்த்தனை: வங்கி அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு

மக்களவைத் தேர்தலையொட்டி, வங்கிகளில், ரூ.ஒரு லட்சத்துக்கும் மேலாக பணம் எடுப்போரின் வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்குமாறு வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, வங்கிகளில், ரூ.ஒரு லட்சத்துக்கும் மேலாக பணம் எடுப்போரின் வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்குமாறு வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவும், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணம், பொருட்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும், 65-க்கும் மேற்பட்ட குழுவினர் வாகனச் சோதனை நடத்தி ரூ.15 லட்சத்துக்கும் மேலாக பணம், வெள்ளி, தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, வங்கிகளில் புதியதாக கணக்கு தொடங்குபவர்கள், ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் பணம் எடுப்பவர்கள், அதிகப்படியாக வங்கிக்கணக்கில் பணம் வரவாவது உள்ளிட்டவற்றை கண்காணிக்குமாறு அனைத்து வங்கி மேலாளர்களுக்கும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிய ஆவணமின்றி வாடிக்கையாளர் யாருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம். முத்தரசு கூறியது: தேர்தலையொட்டி, வங்கிகளில் சேமிப்பு மற்றும் வணிக ரீதியான பணப்பரிமாற்றத்தை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வங்கியில் இருந்து ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வோர், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதேபோல், ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப செல்வோர், அதற்குரிய சான்றிதழ், வங்கியின் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மேலாளர்கள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கும் கணக்குகள், அதில் நிகழும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை புகார் அளிக்கும் வகையில் எவ்வித வங்கி கணக்குகளும் இல்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com