மறைந்த தலைவர்கள் பெயர்கள் இல்லாத சுவர் விளம்பரங்கள்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், திமுக, அதிமுக சந்திக்கும் மிகப் பெரிய தேர்தல் இது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில்


கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், திமுக, அதிமுக சந்திக்கும் மிகப் பெரிய தேர்தல் இது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இரு கட்சிகளும், சுவர் விளம்பரங்களில் தங்களுடைய முன்னோடி தலைவர்களை தவிர்த்து எழுதியிருப்பது வாக்காளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி, ஒவ்வொரு தொகுதியிலும் திமுக, அதிமுகவினர் சுவர் விளம்பரங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுவர் விளம்பரத்துக்கு, தேர்தல் அதிகாரிகள் தடைபோட்டபோதும், மீண்டும் மீண்டும் சின்னம், தலைவர்கள் பெயர் எழுதுவதில் தொண்டர்கள் மும்முரமாக உள்ளனர்.
முந்தைய தேர்தல்களில், அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்.ஜி.ஆர். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா பெயர்கள் இடம் பெறாமல் சுவர் விளம்பரம் இருக்காது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, திமுகவின் நிலையே மாறிவிட்டது.
விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக களம் இறங்குகிறது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் மு.க. ஸ்டாலின் சந்திக்கும் சவாலான தேர்தல். இரு தரப்புமே தங்களது வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆனால், சுவர் விளம்பரங்களில் மக்களை ஈர்க்கும் வகையில், மூத்த தலைவர்களான கருணாநிதி பெயரோ, ஜெயலலிதா பெயரோ இடம் பெறாமல் இருப்பது அவர்களது பேச்சை ரசித்த வாக்காளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் இந்நிலை காணப்பட்டாலும், அதிமுகவின் கோட்டையாக விளங்கும் நாமக்கல் தொகுதியில் ஜெயலலிதா பெயர் இடம்பெறாமல் உள்ளது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், அனைத்து வீடு மற்றும் சுற்றுச்சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் வரிசை கட்டியுள்ளது. அவற்றில் சில இடங்களில் ஜெயலலிதா பெயர் இடம் பெறாமல், இபிஎஸ், ஓபிஎஸ் என எழுதியுள்ளனர். அதேபோல், திமுக விளம்பரங்களில், கருணாநிதி பெயர் இடம் பெறாமல், மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றிருப்பது மூத்த திமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது; ஒரு சில சுவர் விளம்பரங்களில், அதுபோன்று ஜெயலலிதாவின் பெயரை எழுதாமல் விட்டிருக்கலாம். பெரும்பாலான இடங்களில், ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ், தங்கமணி ஆகியோர் பெயரை எழுதியே விளம்பரம் செய்துள்ளோம். வேட்பாளர் பெயர் அறிவித்தவுடன், அவ்வாறு விடுபட்ட இடங்களில்
ஜெயலலிதா பெயரை எழுதி விடுவோம், என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com