வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திறந்தவெளிக் கிணறு: தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

நாமக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள திறந்தவெளிக் கிணற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நாமக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள திறந்தவெளிக் கிணற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இரு வழிச்சாலைகள் நான்கு வழி,  ஆறு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன.  இவற்றில் பெரும்பாலான சாலைகள் விவசாய நிலங்களை ஒட்டியபடியே அமைந்துள்ளன.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை -7,  தருமபுரி, சேலம்,  நாமக்கல் வழியாக அமையப் பெற்றுள்ளது.
சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது, பெரும்பாலான விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு இருக்கும் சூழல் உருவானது. பாதுகாப்பு கருதி ஒரு சில பகுதிகளில் தடுப்புச் சுவர், கிணற்றுக்கு மூடுவேலி போன்றவை அமைக்கப்
பட்டுள்ளது. 
ஆனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் திறந்தவெளிக் கிணறுகள் அதிகமாகவே உள்ளன. இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் நான்கு சக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கிணறுக்குள் பாய்ந்து குழந்தை முதல் பெரியவர்கள் வரையில் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்கிறது.
சேலம் -  நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி பிரிவு அருகே சாலையை ஒட்டியவாறு சுமார் 60 அடி உயர ஆழமுள்ள திறந்தவெளிக் கிணறு உள்ளது. அப்பகுதியில் குடியிருப்போர்,  மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்துத் துணி துவைப்பதற்கும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சாலையில் இருந்து 10 அடி தூரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுப் பகுதியில் எவ்விதத் தடுப்பு சுவரும் இல்லை.
நாமக்கல் நகருக்குள் நுழையும் பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து வாகனம் விலகி விட்டால் கிணறுக்குள் பாய்ந்துவிடும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கிணறு உள்ள பகுதியைக் கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படும் முன் கிணற்று பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com