அ.தி.மு.க.- கொ.ம.தே.க. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்
By DIN | Published On : 24th March 2019 05:21 AM | Last Updated : 24th March 2019 05:21 AM | அ+அ அ- |

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எல்.எஸ். பி.காளியப்பனின் சொத்து விவரம்: கடந்த 5 ஆண்டுகளில், ரூ.65.98 லட்சம் வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். மேலும், அசையும் சொத்துக்களாக, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம் உள்ளது. ரூ.27.10 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. இவரது மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.96 கோடி. இவரது மகன் ஆர்.கே.ராஜா தரப்பில், ரூ.1.95 கோடி, மருமகள் ஆர்.ரேவதி தரப்பில், ரூ.87.76 லட்சம் இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வீடு, கட்டடம், வேளாண் நிலம், காலிமனை என அசையா சொத்துக்களாக, ரூ.1.24 கோடி மதிப்பில் உள்ளன. இவரது மகன் தரப்பில், சுமார் ரூ.80 லட்சத்துக்கும் மேலான அசையா சொத்துக்கள் இருக்கின்றன. கடனாக, வேட்பாளர் பி.காளியப்பனுக்கு ரூ.19.21 லட்சம், அவரது மகனுக்கு ரூ.23.60 லட்சம் உள்ளது.
கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்: கடந்த 5 ஆண்டுகளில், இவர் தனது பெயரில் ரூ.56.93 லட்சம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளார். இவரது மனைவி சாந்தி பெயரில், ரூ.2.02 லட்சம், மகன் சுகந்த் பெயரில், ரூ.30.24 லட்சமும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், வேட்பாளர் சின்ராஜிடம், ரூ.2.21கோடி, மனைவி பெயரில், ரூ.5.36 கோடி, மகன் பெயரில், ரூ.14.72 லட்சம் மதிப்பிலான வங்கி சேமிப்பு, கார் மற்றும் இதர வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் உள்ளன. அசையா சொத்துக்களாக, நிலம், வீடு, கோழிப்பண்ணை, கட்டடங்கள் உள்ளிட்டவை வேட்பாளர் பெயரில் ரூ.13.41 கோடி, மனைவி பெயரில் ரூ.22.45 கோடி, மகன் பெயரில் ரூ.4.93 கோடி மதிப்பில் உள்ளன. கடனை பொறுத்தவரை, சின்ராஜ் பெயரில், ரூ.41.81 லட்சம், அவரது மனைவி சாந்தி பெயரில் ரூ.1.45 கோடி உள்ளன.
அ.தி.மு.க. மற்றும் கொ.ம.தே.க. வேட்பாளர்களின் மனுவில், இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்திலும் பதிவிடப்பட்டுள்ளன.