தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொழுநோயாளிகளின்  எண்ணிக்கை ஆண்டுக்கு 250 என்ற அளவில் அதிகரித்து வருவதாக துணை இயக்குநர் ஏ.ஜெயந்தினி


நாமக்கல் மாவட்டத்தில் தொழுநோயாளிகளின்  எண்ணிக்கை ஆண்டுக்கு 250 என்ற அளவில் அதிகரித்து வருவதாக துணை இயக்குநர் ஏ.ஜெயந்தினி தெரிவித்தார்.
நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் 420 ஆண், பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான, தொழுநோய் சிறப்பு பரிசோதனை முகாம், நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் ஏ.ஜெயந்தினி,  துப்புரவு அலுவலர் கே.சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவுப் பணியில் ஈடுபடுவதால் அத்தொழிலாளர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏதேனும் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்பட்டது. நோயின் ஆரம்ப அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
இம்முகாமை தொடர்ந்து, தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் மருத்துவர் ஏ.ஜெயந்தினி கூறியது:  தொழுநோயை பொறுத்தவரை உணர்ச்சியற்ற நிலையில் காணப்படும். பாக்டீரியாக்கள் காற்றில் பரவி நோயை ஏற்படுத்துகிறது. இந்நோயானது,  சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற வகையில் தோலில் இருக்கும். உடலில் தடிப்பு அல்லது மினுமினுப்பு நிறைந்து காணப்படும். நரம்புகள் தடித்திருப்பதுடன் அதிக வலி இருக்கும். கை,  கால்கள் மதமதப்பாக இருக்கக்கூடும். 
இந்நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம். நோயின் தாக்கம் முற்றினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை செயலிழக்க வைத்துவிடும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தான் இந்த பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. தொழுநோய் பாதிக்கப்பட்டோருடன் வசிப்போருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கவே மாத்திரைகள் வழங்குகிறோம். 
மாவட்டத்தில் தொழுநோயாளிகள் எண்ணிக்கை ஆயிரமாக உள்ளது. ஆண்டுக்கு 250 பேர் என்ற வகையில் இந்நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரிக்கிறது. தொழுநோயாளிகளின் உமிழ்நீர், தும்மல் போன்றவற்றில் இருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், இவற்றைக் கட்டுப்படுத்தவும், தொழுநோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆங்காங்கே சிறப்பு  முகாம் நடத்தப்படுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com